இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!
சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார்.
முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6) என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம்.
கிறிஸ்துவின் பேரன்பு
தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.
தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.
ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.
எனக்குப் பதிலாக இயேசு
இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.
இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.
இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.
நேசிப்பதற்கான புதிய கட்டளை
பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).
இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.
பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.